கடகம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025
(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
இதுவரை ராகு கேது கிரகங்களுக்கு கடுமையான இடம் என்று சொல்லக்கூடிய 4 மற்றும் 10ம் இடத்தில் உங்களது ராசிக்கு மறைமுக ராஜயோக கிரகங்களான இவர்கள் அமர்ந்திருந்தது ஒருபக்கம் மாபெரும் குறைதான். இவர்கள் அல்லாமல் ராசிக்கு யோகாதிபதியான குருபகவானும் ராகுவுடன் இணைந்து 10ம் இடத்தில் அமர்ந்திருந்த நிலை மேலும் பல இன்னல்களை, சம்பந்தமில்லாத பிரச்னைகளை வழங்கி, எப்போது எல்லா விஷய நெருக்கடிகளிலிருந்தும் வெளிவருவோம் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி கடுமைகளை சந்திக்க வைத்தன.
வசந்தகாலம் ஆரம்பம்
இதுவல்லாமல் அத்தனை வித கடுமைகளிலிருந்தும், பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் மீண்டுவிட முடியுமா? என்றபடியான சூழலையே கண்டக ஸ்தானமான 7ம் இடத்தில் அமர்ந்த சனிபகவானும் ஏற்படுத்தினார். அதற்கெல்லாம் மாறுதல், ஆறுதல், புதிய அதிர்ஷ்டம், பொருளாதார உயர்வு, மனதிருப்தி, போட்டி எதிர்ப்பு இல்லாத வாழ்க்கை சரளமான பண வரவுகள், ஈடுபடுகிற அனைத்து விஷயங்களிலும் காரிய வெற்றி என்றபடி ஏற்படுத்துவதற்கே இந்த ராகு-கேது பெயர்ச்சி வந்திருக்கிறது. ஆக உங்களுக்கென இனிமேல்தான் புதிய வசந்தகாலமே பிறக்க இருக்கிறது.
உங்களது ராசிக்கு 3 மற்றும் 9ம் இடத்தில் சாயா கிரகங்களான இவர்கள் படுபலத்தோடு அமரப் போகிறார்கள். எனவே இனி எந்தவித பெரிய பாதகமும், சச்சரவும் ஏற்படுத்தாத அருமையான காலகட்டம் இந்த ராகு-கேது பெயர்ச்சி மூலம் தொடங்கியிருக்கிறது. உங்களது ராசிக்கு ராகு-கேது கிரகங்கள் பெயர்ச்சியாவது ஒருபக்கம் இருக்கட்டும். வருகின்ற டிசம்பர் மாத 20ம் தேதி வரை வாக்கிய பஞ்சாங்கம் பிரகாரம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் அமர்ந்திருக்கப் போகிறார். ஆக, கண்டக சனிபகவான். தருகின்ற நெருக்கடிகளாலும், யோகாதிபதியான குருபகவான் 10ம் இடத்தில் நின்றுகொண்டு தருகின்ற அவஸ்தைகளாலும் மன உளைச்சலை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் தெரிகிறது.
சந்தோஷம் அதிகரிக்கும்
ராகு-கேது வந்து அமரப் போவது பாக்கியஸ்தானம், பணபர ஸ்தானம் என சொல்லப்படுகின்ற 3 மற்றும் 9ம் இடம் என்பதால் எந்தவகையிலும் பெரியதொரு அடைந்து விட மாட்டீர்கள். காரணம் 9ம் இடம் தொழிலால், பதவியால், சொத்து பத்துக்களால் அடையக்கூடிய யோகங்களை இடம். ஆகவே இந்த ராகு-கேது பெயர்ச்சி தொடங்கி மூன்றரை மாத காலங்கள் முடிவதற்குள்ளாகவே ஏகப்பட்ட நன்மை அதிர்ஷ்ட சுபிட்சங்களை கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள். அதாவது வருகிற நவம்பர் மாத 13ம் தேதி வரைதான் சில போராட்டங்கள் உங்களுக்கு தொடரும். காரணம் இந்த ராகு, கேது பெயர்ச்சி நேரத்தில் உங்களது ராசிக்கு சூரியனும், சுக்கிரனும் சரியில்லை. அதன்பிறகு ஏகப்பட்ட குதூகலமும் சந்தோஷமும், இனிமையாகவே அதிகரிக்கப்போகிறது.