மிதுனம் ராசி ராகு கேது பெயர்ச்சி2023 to 2025
(மிருகசீரிஷம் 3,4ம் பாதம், திருவாதிரை. புனர்பூசம் 1,2,3ம் பாதம்)
கடந்த 15 மாத காலமாக ஓரளவு திருப்தியையும், சுபிட்சங்களையும் இல்லத்திற்குள் புதிய இனிமைகளையும் அனுபவித்திருப்பீர்கள். இருந்தாலும், இடையிடையே தேவையற்ற சச்சரவுகளையும், பண விரயங்களையும், இழப்புகளையும் சந்தித்திருப்பீர்கள். உங்களது ராசிக்கு வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அஷ்டமச்சனியின் பொருட்டு கடந்தகால உங்களது வாழ்க்கை நடைமுறை என்பது மிக சிரமமாகவும், பலவித நெருக்கடியான, கடுமையான விஷயங்களிலிருந்து எப்போது வெளி வருவோம்? பணப் பிரச்னைகளிலிருந்து மீள்வது எப்போது? என்றபடியெல்லாம் உங்களது மனதுக்குள் அவநம்பிக்கை மட்டுமே நிழலாடிக் கொண்டிருக்கலாம். இருந்தாலும் ராசிக்கு 11ம் இட ராகு, குரு சஞ்சார கிரக சேர்க்கையால் எல்லாவற்றையுமே சமாளித்தீர்கள். கேது கிரகமும் 5ம் இடத்தில் யோகாதிபதி சுக்கிரனின் வீட்டில் அமர்ந்திருந்ததால் சில நன்மைகளை செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. இதுவெல்லாம் நீங்கள் சந்தித்த விஷயங்கள்தான்.
நிம்மதி, சந்தோஷம் ஏற்படும்
உங்களது ராசிக்கு இதுவரை 11 மற்றும் 5ம் இடத்தில் அமர்ந்திருந்த ராகு-கேது கிரகங்கள் ஜீவன ஸ்தானத்திற்கும், 4ம் இடத்திற்கும் வந்து அமரப்போகிறது. இது சற்று பின்னடைவான நேரம்தான் என்றாலும் எப்பேர்பட்ட கடுமைகளையும் எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய ஆற்றலையும் வழங்கக்கூடிய பெயர்ச்சியாகத்தான் இந்த ராகு- கேது பெயர்ச்சி வந்திருக்கிறது. ஆக பெரிய நிம்மதியும், சந்தோஷமும் இனிமேல்தான் ஏற்படவே இருக்கிறது. ஆனாலும் அஷ்டமச்சனியால் இந்த ராசிக்காரர்கள் படாதபாடே இல்லையென்று சொல்லிவிடலாம். ஆரோக்கிய வகையிலும் அனாவசிய விரயங்கள் ரீதியாகவும், வெளியில் சொல்லமுடியாத பயம் பீதியும், உறவுகள் சார்பான இழப்பு, பணக்கஷ்டம், எதிர்பாராத விரயங்கள் என மற்ற கிரகங்களும் ஆட்டிப் படைத்து வருகின்றன.
ஒருபுறம் குருபகவான் நல்ல நிலைமையில் அமர்ந்திருந்தாலும், மற்ற கிரகங்கள் கோட்சார ரீதியாக ராசிக்கு சரியில்லாத நிலைப்பாடு போன்றவைகளால் அவரவர்களுக்கு தகுந்தது மாதிரி சோதனைகள் குடும்ப கஷ்டங்கள் என்றபடி அஷ்டமச்சனி மிகப்பெரிய பிரச்னை சங்கட இடர்பாடு வளையங்களை உண்டாக்கி திணற வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமை அனைத்தும் வருகின்ற 2023 டிசம்பர் மாத 21ம் தேதியோடு முடிவுக்கு வந்துவிட இருக்கிறது. காரணம் அப்போதுதான் வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் அஷ்டம சனி உங்களை விட்டு முழுமையாக விலகுகிறது.
புதிய இனிமை நீடிக்கும்
அத்துடன் வருகின்ற 2024 மே மாதம் வரை குருபகவான் லாப ராசியில் அமர்ந்திருக்கப் போவதால் அனைத்து விஷய இடர்பாடுகளும் சுபிட்சத்தோடு தீரப்போகிறது. இல்லத்துக்குள் வாழ்க்கைத் துணையிடமும், வாரிசுகளிடமும் நீடித்துவரும் விஷயங்கள் முடிவுக்கு வந்து ஒற்றுமை பலமாகப் போகிறது. புதிய இனிமை நீடிக்கப்போகிறது.