தனுசு ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
இதுவரை உங்கள் ராசிக்கு 5 மற்றும் 11ம் இடங்களில் அமர்ந்து உங்களது கஷ்டத்தையும், பணரீதியான சங்கடங்களையும், குடும்பத் தேவை அத்தியாவசிய விஷயங்களில் ஏற்பட்ட பற்றாக்குறைகளை சரிசெய்து தொடர்ந்த விரயங்களையும் ஒழுங்காக்கி, ஓரளவு திருப்தி இனிமைகளை தந்து வந்த ராகு, கேது கிரகங்கள் ராசிக்கு 4ம் இடத்திற்கும், 10ம் இடத்திற்கும் பெயர்ச்சியாகப் போகிறார்கள். அதாவது நீங்கள் பரிகார ராசி வளையத்திற்குள் வருகிறீர்கள்.
உயர்வுத் திருப்பங்களை அடையலாம்
இவர்கள் பெயர்ச்சியாகி ராசிக்கு சுகம், வித்தை, கல்வி, தாயார் மற்றும் பூர்வீக சொத்துக்களால் அடையக்கூடிய லாபங்களையும், உங்களது தொழிலால் அடையக்கூடிய லாபங்களையும் சொல்லக்கூடிய 4ம் இடத்திலும், ஜீவன, காரிய வெற்றி, செல்வ பதவி ஸ்தானமான 10ம் இடத்திலும் வந்து அமரப்போகிறார்கள். ஏற்கனவே இவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் மூலம் ஏகப்பட்ட சுப வைபவ திடீர் உயர்வுகளை, பொருளாதார மேன்மைகளை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு நடைபெற்ற ஏழரைச்சனி காலத்தின் பொருட்டு உங்களுக்கு எந்த ஒரு புதிய திருப்தி மாற்றமும் ஏற்பட்டிருக்காது.
இப்போது இவர்கள் சுகஸ்தானத்திலும், ஜீவனத் தொழில் ஸ்தானத்திலும் வந்து அமரப்போகிறார்கள். இது ஒரு பாதிப்பான அமைப்புதான் என்றாலும், ராசிநாதன் குருபகவான் வருகின்ற 2024 ஏப்ரல் மாத இறுதி வாரம் வரை அவருக்கே உரித்தான உயர்வான இடத்தில் அமர்ந்திருக்கிறார். அதனால் ராகு-கேது பெயர்ச்சி ஆவது குறித்து நீங்கள் பெரிய கவலைக்கு செல்லவேண்டாம். அடுத்தடுத்த கிரகங்களின் நகர்ச்சியும், யோகாதிபதியான சூரியனின், செவ்வாயின் பலத்தைக்கொண்டும் ஏகப்பட்ட மாற்றங்களை ஆச்சரியப்படும்படி அடையப்போகிறீர்கள். ஆகவே உங்களுக்கு ராகு. கேது கிரகங்கள் கொடுப்பினைகளை, அதிர்ஷ்டங்களை தடுத்தாலும் மற்ற கோட்சார கிரகங்களின் சாதகத்தால் அற்புதமான உயர்வுத் திருப்பங்களை கண்டிப்பாக அடைவீர்கள்.