மீனம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்களது ராசிக்கு சூட்சமமான யோக, அதிர்ஷ்ட கொடுப்பினைகளை உண்டாக்கக்கூடிய சாயா கிரகங்களான இவர்கள் உங்களை கடந்த ஒன்றரை ஆண்டாக பரிகார ராசி வளையத்திற்குள் நிறுத்தி வைத்திருந்தார்கள். மீண்டும் இப்போது ஜென்ம ராசிக்குள்ளும், 7ம் இடத்திற்கும் வந்து பரிகார நிலைமையில் சற்றே தளர்ச்சிகளை உண்டாக்கி ஓரளவு நன்மைகளை, விஷேசகரமான மாற்றங்களை உண்டாக்குவதற்கான ஆயத்தங்களில் ராகுகேது கிரகங்கள் இறங்கப்போகின்றன என்பதுதான் உண்மை.
கலங்கவேண்டாம்
இதுவரை ராசிக்கு 2 மற்றும் 8ம் இடத்தில் அமர்ந்திருந்த இவர்கள் உங்களது ஜென்ம ராசிக்குள்ளும், வாழ்க்கைத்துணை நட்பு கூட்டு மற்றும் உப பந்தய ஸ்தானமான 7ம் இடத்தில் அமரப் போகிறார்கள். ஆக இந்தப்பெயர்ச்சியின் மூலம் எதற்காகவும் கலங்கவேண்டாம். பொதுவாக மீனராசிக்கு ராகு - கேது கிரகங்கள் ஜனன ஜாதக பிரகாரம் ஜாதக கட்டத்தில் எங்கிருந்தாலும், கோட்சார ரீதியாக எந்த இடத்திற்கு மாற்றமாகி வந்தாலும் மாபெரும் நன்மைகளை எந்த ரூபத்திலோ தந்துவிடுவார்கள். அப்படியிருக்கையில் இந்த ராகு- கேது பெயர்ச்சியை பற்றி ராசிக்குள் வருகிறார்களே என்பதைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் இவர்கள் இப்போது வந்து அமரப் போகிற இடம் ஜென்மம் மற்றும் 7ம் இடம் என்பதால் சற்றே உங்களை பரிகார ராசி வளையத்திற்குள் நிற்க வைக்கிறார்கள். அதேநேரம் பெரிய நன்மைகளையும் அடுத்து வருகின்ற ஒன்றரை ஆண்டுகளுக்கு கொடுக்கப் போகிறார்கள். இவர்களது பெயர்ச்சியை மட்டும் கணக்கில்
கொள்ளவேண்டாம். காரணம் இவர்களது பெயர்ச்சி அல்லாமல் மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்துப்பார்த்தால், ராசிநாதனான குரு பகவான் 2ல் அமர்ந்திருக்கிறார். அதாவது வருகிற 2024 ஏப்ரல் மாத இறுதி வாரம் வரை. ஆக இப்போது எல்லாவகையிலும் உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. சனிபகவான் 11ம் இடத்தில் வலிமையாகவே அமர்ந்திருக்கிறார். இவரும் வாக்கிய பஞ்சாங்கம் பிரகாரம் வருகின்ற 2023 டிசம்பர் மாத 20ம் தேதி விரய சனியாக 12ம் இடத்திற்கு வரப்போகிறார். ஆனாலும் உங்கள் ராசிக்கு மாபெரும் யோகத்தை செய்யவேண்டிய கிரகமான செவ்வாய் இந்த ராகு- கேது பெயர்ச்சியான பிறகு அடுத்தடுத்த மாதங்களில் நல்ல இடத்திற்கு வரப்போவதால் எதிர்பாராத விசேஷ நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். சூரிய கிரகமும் அவ்வப்போது நல்ல பலன்களை கொடுக்கின்ற இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆக உங்களது ராசிக்கு எந்தவித பெரிய கடுமைகளும் சூழ்ந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.