தொலைந்து போன குதிரை கண்டுபிடித்துக்கொடுத்த சாய் பாபா / உண்மை கதை
ஷீரடிக்கு இரண்டாவது முறையாகப் பாபா வந்தது மிகச் சுவையான நிகழ்ச்சி. சாந்த் படீல் என்பவர் அவுரங்காபாத் ஜில்லாவில் தூப் என்னும் கிராமத்திலுள்ள பெரிய தனவந்தர். அவர் ஒருமுறை அவுரங்காபாதுக்குச் சென்று கொண்டிருந்த போது, அவர் சவாரி செய்து கொண்டிருந்த குதிரை மேய்வதற்காகச் சென்றதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்தக் குதிரையின்மேல் மிக அன்பு கொண்டிருந்ததால், அதை இரண்டு மாதங்களாகத் தேடினார். இருந்தும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக அவர் அந்தக் குதிரையின் நினைவுச் சின்னமாக, அதன் சேணத்தைச் சுமந்துகொண்டு கால்நடையாகத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையிலுள்ள மரத்தடியில் ஒரு பக்கீர் அமர்ந்திருப்பதைக் கண்டார். பக்கீர் ஒரு நீண்ட அங்கியையும் தொப்பியையும் அணிந்து, தமது கையில் ஒரு சிறு குச்சியொன்றையும் வைத்திருந்தார். அவர், சாந்த் படீலை மரத்தடிக்கு வந்து இளைப் பாறுமாறு அழைத்து, அவர் ஏன் சேணத்தைச் சுமந்து செல்கிறார் என்றும்,
எதைத் தேடுகிறார் என்றும் விளவினார். சாந்த்படீல் தமது தொலைந்து போன குதிரையைப் பற்றிக் கூறியவுடன், பக்கீர் புன்னகையுடன், அருகிலுள்ள ஓடைக்கருகில் தேடும்படி கூறினார். அங்குச் சென்று பார்த்தபோது, தாம் சற்று முன்பு அதே இடத்தில் தேடியபோது காணப்படாத குதிரை, இப்போது அங்கிருப்பதைக் கண்டு வியந்து, மகிழ்ந்து குதிரையுடன் பக்கீரிடம் திரும்பி வந்தார். பக்கீர் தம்மூடன் புகைபிடிக்கும்படி கூறினார்.
புகையிலை, புகைக்குழாய் ஆகியவை தயாராய் இருந்தும், அதைப் பற்றவைப்பதற்கு நெருப்பும், புகையை உறிஞ்சுவதற்குப் பயன்படும் துணியை நனைப்பதற்குத் தண்ணீரும் இருக்கவில்லை. பிறகு பக்கிர்தமது குச்சியால் பூமியைக் குத்த, பூமியிலிருந்து ஒரு நெருப்புக்களல் வெளியே வந்தது. அதைக்கொண்டு புகைக் குழாயைப் பற்ற வைத்துவிட்டு, மீண்டும்.அவரது தடியால் பூமியை அடிக்க, அதே இடத்திலிருந்து தண்ணீர் கசியத் தொடங்கியது. அதில் ஒரு துணியை நனைத்து, அதை வடிகட்டியாக உபயோகித்துத் தாம் புகைபிடித்துவிட்டு சாந்த் படீலுக்கும் அளித்தார். பக்கீரின் அதிசயச் சக்தியைக் கண்டு ஏற்கனவே செயலற்றுப் போயிருந்த சாந்த் படீல், புகைக்குழாயை அந்த மஹானின் ஆசியாகக் கருதி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவரது திருவடிகளைத் தொட்டு வணங்கித் தம் வீட்டிற்கு எழுந்தருள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பக்கீர், அதற்கிசைந்து சாந்த் படீலோடு அவர் வீட்டுக்குச் சென்றார்.
சிறிது காலத்துக்குப் பின் சாந்த் படிலின் மருமகன் ஒருவனுக்கு, ஷீரடியில் திருமணம் நிகழ இருக்கவே, அவர் பக்கீரையும் திருமணத்துக்கு வந்து ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படியே திருமணக் குழுவினர் ஷீரடியை அடைந்தனர். மாட்டுவண்டிகள் கிராமத்தின் எல்லையோரத்தில் நிறுத்தப்பட்டன. பக்கீர் வண்டியிலிருந்து இறங்கிய போது, கிராமத்துக் கோவிலில் பூசாரியாக இருந்த மஹல்சபதி என்பவர், சில ஆண்டுகளுக்குமுள் வேப்பமரத்தடியில் அமர்ந்திருந்த அதே சிறுவள்தான் இந்த மஹான் என்று அடையாளங்கண்டு கொண்டு, அவரை 'யா சாயி' (சாதுவே, உமக்கு நல்வரவு) என்று கூறி வரவேற்றார். அன்றிலிருந்து பேரும் ஊரும் தெரியாத அந்த மர்மமான பக்கீருக்குச் 'சாயிபாபா' என்ற பெயரே நிலைத்து விட்டது.
